கடவுள் அருவருக்கும் விக்கிரக ஆராதனை
- Prakash Agathu

- Nov 28, 2022
- 3 min read
Updated: Nov 29, 2022
இங்கு குறிப்பிட்டிருக்கிற 'கடவுள்' கிறிஸ்தவர்களின் கடவுள் அல்ல. மனுக்குலத்திற்கே கடவுள். பைபிள், இந்த கடவுள் மனுக்குலத்திற்கு அருளிய சத்திய வார்த்தை.
கடவுளின் கட்டளை என்ன?
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; - பைபிள்.
கடவுள் ஆவியாயிருக்கிறார். -பைபிள். அதாவது, அவர் உடலில் இல்லை; ஆனால் நிச்சயமாக அவருக்கு ஒரு சாயல் உண்டு; ரூபமுண்டு. ஏனென்றால் அவர் தம்முடைய சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்கினார். தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். -பைபிள். இதனால்தான் மனுஷராகிய நமக்கு ஆவி ஆத்துமா மட்டுமல்ல ஐம்புலன்களையும் பயன்படுத்த அவயவங்கள் உள்ள உடல் அவசியம்.
கடவுளோ ஆவியும் ஆத்துமாவும் மட்டுமே உடையவர். இவருக்கு செயல்பட சரீரம் அவசியம் இல்லை. இவர் உடலின்றியே அசைவாட, சிந்திக்க, முன்னறிய, தெரிந்துகொள்ள, காண, கேட்க, பேச, இனி நடக்க இருக்கும் சம்பவங்களை முன்னறிவிக்க, ஆளுகைசெய்ய, அழைக்க, ஆறுதல் சொல்ல, சுவாசிக்க, உணர, நகைக்க, பெருமைசெய்கிறவர்களை எதிர்க்க, தீமையைக் கண்டும் தீமைசெய்கிறவர்களைக் கண்டும் கோபப்பட, எரிச்சலடைய, வைராக்கியம் கொள்ள, தமக்குரிய மகிமையை துச்சமான அவருடைய சிருஷ்டிகளுக்கு கொடுக்கும்போது பொறாமைகொள்ள, நீடிய பொறுமையாய் இருக்க, நியாயமாக தீர்ப்பு செய்ய, பழிவாங்க, தண்டிக்க, இரக்கம் காண்பிக்க, அன்புகூற, கிருபை அருள, மனந்திரும்பி வருபவர்களை மன்னிக்க, நீதிமான்களாக்க, பரிசுத்தமாக்க, தோளில் சுமக்க, அரவணைக்க, தம்மை அண்டிக்கொள்கிறவர்களைக் காக்க, சுகமாக்க, அற்புதம் செய்ய, வழிநடத்த, கூடவே இருக்க, ஆசீர்வதிக்க, மகிமைப்படுத்த முடியும்.
இவரே நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாய் இருக்கிறார். -பைபிள். இந்த கடவுள்தான் ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். -பைபிள். இவரின் படைப்பாகிய மனுஷரிலும் முற்றிலும் வித்தியாசமாக, இவர் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கவும், எல்லாமே செய்யவும், எல்லாவற்றையும் அறிந்திருக்கவும், வாக்குப்பண்ணவும், வாக்கை நிறைவேற்றவும் வல்லவர். தனிச்சிறப்புமிக்க இவர் நிகரற்றவர். இவரே தன்னுடைய எல்லாப்படைப்புகளுக்கும் காரணராகையால் யாவருக்கும் பிதா அல்லது தந்தை. தாயைப்போல தேற்றினாலும், தாய் அல்ல.
எங்கும் உள்ள கடவுள் என்பதால், அவர் ஒரு விக்கிரகமாக ஒரே இடத்தில் இருக்க முடியாது; மனுஷரால் வடிவமைக்கப்படவோ, செதுக்கப்படவோ, வரையப்படவோ, மனுஷர் கைகளால் கட்டப்பட்ட ஒரு ஆலயத்திற்குள் பூட்டி வைக்கப்படவோ முடியாது. ஒரு ஆவியாக இருந்தால்தான் மனுஷனுடைய இருதயத்தை அவர் ஆளும் ஆலயமாக்கிக்கொள்ள முடியும்; அவனுடைய உடலை அவருடைய கோஇல் ஆக்கி அவனுக்குள் ‘குடி’கொள்ள முடியும்.
எல்லாம் வல்ல கடவுள் என்பதால் ஒரே கடவுள் தான், பல கடவுளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. படைக்க ஒன்று, காக்க ஒன்று, அழிக்க ஒன்று என்றோ, கல்விக்கு ஒன்று, செல்வத்துக்கு ஒன்று, வீரத்துக்கு ஒன்று என்றோ பன்மையில் இல்லை. அவர் ஒருவரே படைத்து, காத்து, அழிக்க முடியும். கல்வி, வீரம், செல்வம், இன்ன பிற ஆசிகளையும் அவரே அருளிச்செய்ய முடியும்.
யாவும் அறிந்த கடவுள் என்பதால் அவருக்கு ஒருவரும் எதையும் சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு எந்தவொரு காரியத்தின் முடிவும் ஆரம்பத்திலேயே தெரியும். ஒவ்வொரு மனுஷனுடைய வாழ்நாட்கள் மட்டுமல்லாது, இப்பிரபஞ்சத்தின் ஆரம்பமும் முடிவும் அவருக்குத்தான் தெரியும். மனுஷருடைய இருதையத்தின் நினைவுகளையும் சிந்தைகளையும் அவை தூரத்தில் இருக்கும்போதே அவர் அறிகிறவர். நம்முடைய நாவில் சொல் பிறவா முன்னரே அவை யாவும் அவர் அறிவார்.
பிதாவாகிய கடவுள் என்பதால் இவர் ஆண் ரூபமே; பெண் அல்ல. அப்படியானால் இவர் தேவன்தானேயல்லாமல் தேவி அல்லவே அல்ல; அம்மா அல்ல; அம்மன் அல்ல; தேவதை அல்ல. வடமொழியில் இவர் தேவ், பாபா என்றும் செல்லமாக அப்பா, அப்பன், ஐய்யன், தாதன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த தந்தையாம் தெய்வத்துக்கு நாம் யாவரும் (அடங்காமல் எதிர்த்துக்கொண்ட) பிள்ளைகளே. (முதற்பேறு ஆகிய இயேசு நமக்கெல்லாருக்கும் மூத்த சகோதரனே; இயேசப்பா அல்ல).
காணக்கூடாத இந்த ஆவியாகிய தெய்வமே, உலகத்திற்குள்ளும், மனிதவர்க்கத்துக்குள்ளும் கடந்து உள்ளே வந்ததால்தான் இவர் கடஉள். இந்த கடவுளே தன்னை மனுஷருக்கு தன்னுடைய மகன் / குமாரன் என்கிற வடிவத்தில் காண்பிக்கும்படியாக வரலாற்று நாயகனாக 2020 வருடங்களுக்கு முன்பாக இப்பூமிக்கு வந்தார். இவருக்கு இரட்சகர் அல்லது முடிவில்லா அழிவினின்று காப்பாற்றுகிறவர் என்று பொருள்படும் இயேசு அல்லது ஈசன் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நம் உள்ளத்துக்குள் கடந்துவரும் பரிசுத்தஆவியானவரும் இந்த கடஉளே.
அன்பாகிய கடவுளின் தற்சுரூபமாகிய இயேசு, பாவக்கேட்டில் உழன்றுகொண்டு பேரழிவை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நம்மை மீட்கும்படியாக, நமக்கு மாற்றாளாக தன்னுடைய இரத்தத்தை சிந்தி உயிரைக்கொடுத்து தப்புவித்தார். மரணத்தையும் ஜெயித்து உயிர்த்தெழுந்ததால் தேவகுமாரன் என்று பலமாய் நிரூபிக்கப்பட்டார். இவரே வழியும் சத்தியமும் ஜீவன் என்ற வாழ்வுமானவர் என்று நம்பி தங்களுடைய பாவத்துக்காக மனம்நொந்து இவரிடம் வருபவர்களை கடவுளாகிய இவர் ஏற்றுக்கொள்ளுகிறார். மனந்திரும்பி வருபவர்கள் யாவரையும் ஜாதி, மதம், மொழி, நிறம், பொருளாதார நிலை என்ற வித்தியாசமின்றி மன்னிக்கிறார்; தம்முடையவர்களாக சேர்த்துக்கொள்கிறார். அவருடைய வாக்குப்படியே சீக்கிரம் திரும்ப வந்து தம்மோடு இவர்கள் என்றென்றும் இருக்கும்படியாக இவர்களை அழைத்துச் செல்வார்.
இவருக்கு பல காரணப்பெயர்கள் இவர் பிறக்குமுன்னரும், பிறந்தபொழுதும், மரித்து உயிர்த்து பரமேறிப்போன பின்னரும் சூட்டப்பட்டன. எபிரேய மொழியில் யாவே (YHWH யெகோவா) என்றும் தமிழில் ஐயா என்றும் வடமொழியில் கர்த்தர் என்றும் ஆங்கிலத்தில் LORD என்றும் பொருள்படும் சொல்லோடு இவருக்கு கொடுக்கப்பட்ட கூட்டுப்பெயர்கள் ஏராளம். எடுத்துக்காட்டாக, யெகோவா யீரே என்றால், கர்த்தர் பொறுப்பெடுத்துக்கொள்வார், பார்த்துக்கொள்வார், தருவார் என்று பொருள்படும்.
மனுஷர் செய்வது என்ன?
மனுஷர் கடவுளை அறிந்தும், அவரைத் கடவுளென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத கடவுளுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள். நம்மைப் படைத்த கடவுளுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள். -பைபிள். இங்கு, மரணம் என்பது, நரகமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல்; முடிவில்லா வேதனையின் இடம்.
ஒன்றான மெய்க்கடவுளாகிய இவருக்கும் இவரை நமக்கு காண்பிக்க வந்த ஈசுவரனுக்கும் உரியதாகிய பெயர்களை மனுஷர் வணங்கும் விக்கிரகங்களுக்கு சூட்டி, அதே பெயர்களை பின்பு வளர்ந்து பெரிதாகும் குழந்தைகளுக்கும் சூட்டி, விளித்து, இப்படி அவருடைய நாமத்தை வீணில் வழங்குகிறோம். உதாரணமாக, சிவம் என்றால் அன்பு. பாவமாகிய பகையை அழித்து நம்மீது மெய் அன்புகூர்ந்தவர் இந்தக் கடவுள்தானே!. சிவக்குமார் இந்த அன்பாகிய கடவுளின் மகன். இவர் இயேசுதானே! விநாயகர் என்றால் தீமையை வென்றவர். சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்து பாதாளத்தையும், நம் எதிராளிகளாகிய சாத்தானையும், மரணத்தையும், நமக்காக ஜெயித்து, முடிவில்லா அழிவினின்று நம்மை இரட்சிக்க கடவுளின் பிள்ளையாக வந்தவர் இந்த ஈசன்தானே! விட்டுணு (விஷ்ணு) என்றால் எங்கும் நிறைந்திருக்கிறவர்; நரக தண்டனையிலிருந்து நம்மை காக்கும் தெய்வம் பைபிள் சொல்லும் கடவுள்தானே! பிரமன் என்கிறவர் இந்த சிருஷ்டிகர்தானே!
உண்மை தெய்வமாகிய இவருக்கு பதிலாக, வேறு எந்த நபரையோ (மரியாள், செபஸ்தியார், அந்தோணியார், மாதா, அன்னை, தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி, காதலன், காதலி, ஆசிரியர், சத்குரு, முதலாளி, முனிவர், புத்தன், வீரன், விளையாட்டு வீரர், நடிகர், தீர்க்கதரிசி, பாஸ்டர், சாத்தான், தேவதூதர்கள்), சாமிபடம், இயேசுவின் படம், சூரியன், குரு, சனி போன்ற கிரகங்கள், பசு, யானை, நாகம், கழுகு, காகம், மரம், சிலுவை, பைபிள் புத்தகம், ஜெபமாலை, தீபம், புனிதத்தலம், புனிதக்கல், புனிதநீர், பிரசாதம், அப்பம்-திராட்சைரசம், தொழில், பொருள், செல்ஃபோன், பணம், வாகனம், சொத்து, செல்வம், இவைகளை முன்னிறுத்தி, பணிந்து, மேன்மைப்படுத்தி, கும்பிட்டால், இதுவும் விக்கிரக ஆராதனையே.
நாம் செய்ய வேண்டியது என்ன?
கடவுள் சொல்லும் வார்த்தையை நம்பி, விக்கிரகங்களை விட்டு, மனந்திரும்பி, மன்னிப்பு கோரி, அவரிடம் வந்து அவரை பணிந்துகொள்வதே நாம் செய்யத் தக்க செயலாகும். செய்வோமா?



Comments