மறுபிறவியா மறுபிறப்பா?
- Prakash Agathu

- Dec 3, 2022
- 3 min read
Updated: Jul 8, 2023
ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். -இயேசு கிறிஸ்து.
ஈசன் இவ்வார்த்தைகளை நிக்கொதேமு எனப்பட்ட ஒரு யூதமத போதகரின் கேள்விக்கு பதிலாக சொன்னார் என்று பைபிளில் எழுதியிருக்கிறது. ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? என்பதுதான் கேள்வியே.
மறுபிறப்பா அல்லது மறுபிறவியா? பல மதத்தினர் இன்று நம்பும் கொள்கை மறுபிறவிக் கொள்கையே. இந்தப் பிறவியில் நல்லவர்களாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் மேன்மையுடையவர்களாய் பிறப்போம் என்றும், பொல்லாதவர்களாக வாழ்ந்தால் இளிவானவர்களாகவோ கீழ்த்தரமான பிராணிகளாகவோ பிறப்போம் என்றும் நம்புபவர்கள் பெரும்பாலானோர். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூத ஜனங்களில் சிலரும் இப்படி நம்பினார்கள் போல. (யோவான் 9ஆம் அதிகாரம்). இந்த மறுபிறவிசுழற்சிக்கு முடிவில்லை என்பதும் நம்பிக்கை.
(கடவுளே தசாவதாரங்களாக திரும்பத்திரும்ப இப்பூமிக்கு வருவார் என்பதும் இந்த பிறவிசுழற்சி நம்பிக்கைகளில் அடங்கும். பரிணாமக்கொள்கையின் மூலாதாரமாக விளங்குவது இந்த தசாவதார நம்பிக்கையே. மச்சாவதாரத்திலிருந்து (மீன்) கூர்ம (ஆமை), வராக (பன்றி), நரசிம்ம (பாதி மிருகம் பாதி மனிதன்), வாமன (அறிவில் சிறுத்த குட்டை மனிதன்), பரசுராம (கொடிய வீரன்), ராம (உத்தமன்), பலராம / கிருஷ்ண (கம்ச / அசுர வதை செய்பவன்), கிருஷ்ண / புத்த (ஞானபோதகன்), கல்கி (தீமையை அழித்து ஜெயிக்கிறவன்) அவதாரங்களாக பரிணமித்து வரும் பிறவிகள் இந்தக் கடவுளாம்!).
இந்திய யூதர்களாகிய இங்கு குடியேறிய இந்துக்கள் சடங்காச்சாரமாக இன்றும் தங்கள் ஆண்பிள்ளைகளுக்கு உபநயம் பண்ணும் நாளில் மறுபிறப்பு நிகழ்வதாக பாரம்பரியம். பிராமணர் மட்டுமல்லாமல் இவர்களுக்கு ஆயுதமேந்தி பாதுகாப்பளிக்கும் சத்திரியரும் இவர்களுக்கு பொருட்களை விற்கும் வைசியரும் புனர்ஜென்மம் அடையலாம் என்று மனுதர்மம் சொல்லுகிறது. பெண்களுக்கும் இந்த மூவருணத்தாருக்கு சேவை செய்யும் இத்தேசத்தின் சொந்தக்காரராகிய சூத்திரருக்கும் இது கிடையாது! இப்படி பூணூல் போட்டுக்கொண்ட ஆம்படையான்கள் த்விஜ என்று கருதப்படுகிறார்கள்; அதாவது இருமுறை பிறந்தவர்கள்; முதல் முறை இரத்தத்தோடு உடலில் / மாம்சத்தில் பிறந்தவர்கள்; இரண்டாம் முறை ஆவியில் பிறந்தவர்கள். ஆனால், இதன் மெய்ப்பொருள் இதோ:
பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. -பைபிள். இது பாவமனுஷராகிய நம் யாவருக்குள்ளும் மெய்யே. ஆவியினாலே உயிர்பெற்று ஜலத்தினாலே மட்டுமே வந்தவன் முதல் மனுஷனாகிய ஆதாம் மட்டுமே. அவனுக்குப் பின் வந்த நாம் அனைவரும் பாவ மன்னிப்படைந்து, அழிவிலிருந்து மீண்டு, கடவுள் அருளும் முடிவில்லா நிறைவாழ்வு பெற்றுக்கொள்ளும்படியாக நம்மைப்போலவே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர் இயேசுகிறிஸ்துவாகிய இவரே. -பைபிள். பரிசுத்த ஆவியினாலே உற்பவித்துப் பிறந்த மனுஈஷனாகிய தேவகுமாரன் இந்த ஈசுவர் / ஈசு / ஈசா தான். காணக்கூடாத கடவுளின் ஒரே திருஅவதாரமாக (அவ – கீழே; தார் – கடந்து வந்த) தற்சுரூபமாக வந்த இந்த இயேசு நம்முடைய இடத்திலே, நமக்கு மாற்றாளாக தன்னுடைய இரத்தம் முழுவதும் சிலுவையில் சிந்தி பாவப்பரிகாரம் செய்து முடித்தார். ஏன்? மாம்சத்தின் உயிர் இரத்தத்திலிருக்கிறது. அது பாவநிவிர்த்திக்காக சிந்தப்படவேண்டும்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். -பைபிள். ஜாதி, இன, மத, நிற, மொழி, கோத்திர, பாலின பேதமின்றி அனைவரையும் அவர் தம்மண்டை அழைக்கிறார். “நான் பாவவிமோசனம் அடையும்படியாக இயேசு மரித்தாரே”, என்று மனம்நொந்து, “நான் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்ளும்படியாக மரித்த இயேசு புனருத்தானம் அடைந்து உயிர்த்தெழுந்தார்”, என்று விசுவாசித்து மனந்திரும்பி அன்பாகிய அவரண்டை வருவோருக்கு பாவமன்னிப்பு அருளி, அவர்களை ஏற்றுக்கொள்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக நம்பி வந்தவர்கள் “அவரோடு நானும் மரித்துவிட்டேன்” என்று உணர்ந்து அவரிடம் ஒப்புக்கொடுத்தால், ஜீவனாகிய அவர் நமக்குள் வருகிறார். புதுஜீவன் பெற்று புனர்ஜென்மம் என்னும் மறுபிறப்பு அடைகிறோம். இரட்சிக்கப்படுகிறோம். தேவனுடைய இராஜ்ஜியம் இன்னதுதான் என்று காண நம்முடைய மனக்கண்கள் திறக்கின்றன. சிலுவையில் அவர் அரையப்படும்பொழுது அவருக்குள் நானும் இருந்தேன் என்பதால் அவர் சிந்தின இரத்தம் என்னுடையதும்தான் என்று ஞானார்த்தமாக விசுவாசித்து உணரும்போது நான் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கிறேன். அதுவரை கடவுளுக்குப் பகைஞராக இருந்த நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கி தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்துகிறார். -பைபிள்.
நான் இப்படி மறுபடியும் பிறந்த நாள்முதல் நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். -பைபிள். எனக்கு இந்தப் பிறந்தநாளே அதிவிசேஷமானது.
உபநயம் பண்ண (பிரம்மோபதேசம் அடையவும் பண்ணவும், போராயுதங்கள் கையாளவும் வியாபார நுணுக்கங்கள் அறியவும்) ஒரு குறிப்பிட்ட வயதை அடைவது அவசியம் எப்படியோ, அப்படியே சுயமாக சிந்திக்க திறன்வாய்ந்தவர்களே மறுபடியும் பிறக்கமுடியும். குழந்தைகளால் இது முடியாது. கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். -பைபிள்.
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. -பைபிள். மறுபிறப்பு என்பது பழைய பாவம்நிறைந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; இயேசுவின் தன்மைகளை வெளிப்படுத்தும் புதிய வாழ்வின் துவக்கம். கடவுளுடைய வார்த்தையாகிய அவரின் வித்து எனக்குள் விதைக்கபட்டது இப்பொழுது அவருடைய வார்த்தையானவராகிய இயேசுவாக எனக்குள் பிறந்துவிடுவதால், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். -பைபிள். இப்படி இயேசு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பிறக்க வேண்டியது அவசியமே.
மறுஜென்மமடைந்தவர்கள் தங்கள் பழைய வாழ்க்கை முடிந்து மறுபிறப்படைந்ததை அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கவே தண்ணீரில் மூழ்கி ‘ஞான’ஸ்நானம் எடுக்கவேண்டும். செத்த சரீரம் அடக்கம் செய்யப்படுவதை ‘ஞான’அர்த்தமாய் உணர்த்துவதே தண்ணீரில் மூழ்குவது. தண்ணீர் தலைமேல் தெளிப்பதோ ஊற்றுவதோ இந்த அர்த்தமிக்க செயலை கனவீனமாக்கும் வெறும் சடங்காக மாற்றிவிடும். இப்படி செய்வதற்கு பதிலாக இதை செய்யாமலிருப்பதே மேல். ஞானஸ்நானம் எடுக்க வாய்ப்பில்லாதபோது, இரட்சிக்கப்பட்டவர் மரிக்க நேரிட்டால், சுவர்க்கலோகம் போவார்கள். நரகத்திற்கு அல்ல. பரலோகம் போக இரட்சிப்பு அவசியமேயல்லாமல் இரட்சிப்பை சாட்சியாக அறிவிக்கும் ஞானஸ்நானம் அல்ல.
இயேசுவின் ஜீவனைப் பெற்று மறுபிறப்பு அடைந்தவர்கள், ஒரு குழந்தை நாளுக்கு நாள் வளருமாப்போல நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும் கிறிஸ்துவின் சாயலிலே வளர வேண்டியது அவசியம். எனவே, நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. இதற்காகவேதான் நமக்குள் குடியிருக்கும் பரிசுத்த கடவுளின் ஆவியானவர் நமக்கு “எல்லாவற்றையும் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் நினைப்பூட்டுவார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்”. -இயேசு.
கடவுள் அருளும் திறனாலே மெய்யான திராட்சைச்செடியாகிய இயேசுவின் கொடிகளாக சுபாவத்திலும் தன்மையிலும் ஒவ்வொருநாளும் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருப்பவர்கள் நாளுக்குநாள் ஆவிக்குறியவிதத்தில் முதிர்ச்சியடைந்துகொண்டே இருப்பார்கள். இதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரை நினைவுகூரும்படியாக அவருடைய மாம்சத்திலும் இரத்தத்திலும் பங்குள்ளவர்களாவதைக்குறிக்கும் அப்பம் திராட்ச்சைரசம் இவைகளில் விசுவாசிகள் கூடிவரும்போதெல்லாம் பங்குகொள்ளவேண்டும். கர்த்தர் பண்ணின வாக்குப்படி அவர் வரும் நாளில் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். -பைபிள்.



Comments